Wednesday, April 17, 2013

பயங்கரமான ஆட்கொல்லி மீன்உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால்‘பிரானா’என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.
 
இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின் வடபகுதி முதல் கொலம்பியா வரையிலான பிரதேசத்தில் காணப்படுகின்ற இவ்வகை மீன்களின் வித்தியாசமான 20 இனங்கள் அமேசன் நதியில் வாழ்கின்றன.
 
பிரானா மீன் இனங்களுள் செந்நிற வயிற்றுப் பிரானா முரட்டுத்தனத்துக்குப் பெயர் பெற்றதாகும். இவ்வின மீன்கள் ஏனையவற்றைவிட மிக வலிமையான தாடைகளையும் மிகக் கூர்மையான பற்களையும் கொண்டுள்ளன.
 
பிரானாமீன் இனங்களைச் சேர்ந்த பெரும்பாலான மீன்கள் நீளத்தில் 60 செ.மீ. மேல் வளர்வதில்லை. அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும்.
அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும். வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருத்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் இரு தாடைகளும் ஒன்றுசேரும்போது கத்தரிக்கோலைப் போல நறுக்கக்கூடியனவாக இப்பற்கள் அமைந்துள்ளன.பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். பெரிய விலங்கொன்று தாக்கப்படும் சந்தர்ப்பங்களில் பல கூட்டங்கள் ஒன்றாகத் திரண்டு அவ்விலங்கைக் கடித்துக் குதறிவிடுகின்றன. இவ்வாறு குறுகிய நேரத்தினுள் எலும்புக்கூடு மாத்திரம் மிஞ்சும். பொதுவாக செந்நிற வயிற்றுப் பிரானாக் கூட்டமொன்றைச் சேர்ந்த மீன்கள் பரவிச் சென்று இரை தேடலில் ஈடுபடுகின்றன.
மனிதர்கள் இவ்வாறு கொல்லப்படுவது மிக அபூர்வமாகவே நிகழ்கின்றது. எனினும், அண்மைக் காலத்தில் தென்னமெரிக்காவின் சில பகுதிகளில் மனிதர்கள் மீதான பிரானா தாக்குதல்கள் அதிகரித்து வந்துள்ளன.
 
ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றி பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள், பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.
 
பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால் கோடைகாலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுபாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன.
 
ஆறுகளுக்குக் குறுக்காக அணைகள் கட்டப்பட்டு நீரோட்டம் தடுக்கப்படுவதால் தாக்குதல் நடக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வீட்டில் வளர்க்க இது தடைசெய்யப்பட்ட மீன்.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவையாக கருதப்படுகிறது.
 
நன்றி இணையம்

Thursday, April 11, 2013

விரல் நுனியில் எல்லா தகவலும்

 
எல்லா தகவல்களையும் என் விரல் நுனியில் வைத்திருக்கிறேன்’ என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம். விரல் நுனிக்கும் தகவல்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால், தகவல்களை சேகரிக்க நம் விரல் களும் ஒரு வகையில் உதவத்தான் செய்கின்றன. நாம் இந்த உலகத்தை, சுற்றுச்சூழலை உணர நமக்கு ஐந்து புலன்கள் உண்டு. அவற்றில் ஒன்று தொடுஉணர்வு.

இந்த தொடு உணர்வு மூலம் தகவல்களை சேகரிக்க, நம் விரல்கள்தான் நமக்கு பெரிதும் உதவுகின்றன. உதாரணமாக, தகவல்களை துல்லியமாக சேகரிக்கக்கூடிய நவீன கருவி களைப் போன்றவை நம் விரல்கள் என்று சில வல்லுனர்கள் குறிப்பிடுவதைச் சொல்லலாம்.

ஆனாலும், நம் விரல்களால் தொட்டு உணர்ந்துகொள்ள முடியாத எண்ணற்ற பொருட்களும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. விரல்களின் இந்த இயலாமையை போக்க வந்துவிட்டது `மின்னணு விரல் நுனிகள்’ என்று அட்டகாசப்படுத்துகிறார்கள் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

விரல்களின் நுனியில் (சிறிய உறை போல) அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மின்னணு விரல் நுனி கருவி விரல்களின் தொடு உணர்வுத் திறனை பல மடங்கு அதிகமாக்கக் கூடியவை. இதனை அணிந்துகொண்டு எந்த ஒரு பொருளைத் தொட்டாலும், அந்த கருவியிலிருந்து வெளியாகும் தனித்துவமான அதிர்வலைகள் விரல்களை வந்து சேரும். இந்த அதிர்வுகளின் மூலமே விரல்களின் தொடுஉணர்வுத்திறன் பல மடங்கு மேம்படு கிறது என்கிறார் ஆய்வாளர் ரோஜர்.
    
முக்கியமாக, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளுக்கு இந்த மின்னணு விரல் நுனிகள் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என்கிறார் ரோஜர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித விரல்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் இந்த மின்னணு விரல் நுனிகளில் வளையும் தன்மையுள்ள மின்சார சர்கியூட் ஒன்று உண்டு. இதில், சில நானோ மீட்டர்கள் தடிமன் உள்ள தங்க மின் முனைகளாலான படலங்கள், பாலிஇமிட் பிளாஸ்டிக் எனும் ஒரு வகை பிளாஸ்டிக் படலங்களுக்கு நடுவே சான்ட்விச் செய்யப்பட்டிருக்கும். இந்த அமைப்புக்கு `நானோ ஜவ்வு’ என்று பெயர்.

பின்னர், விரல் போன்ற வடிவமைப்புள்ள ஒரு சிலிக்கான் ரப்பர் குழாயில் நானோ ஜவ்வு ஒட்டப்படுகிறது. முக்கியமாக, நானோ ஜவ்வில் உள்ள ஒரு மின்சார சர்கியூட்டின் ஒரு பக்கம், விரல் நுனிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் வண்ணம் நானோ ஜவ்வு பொருத்தப்படுகிறது. சர்கியூட்டின் மறுபக்கத்தில் அழுத்தம், வெப்பம் அல்லது மின்சார பண்பான ரெசிஸ்டன்ஸ் போன்றவற்றை பதிவு செய்யும் சென்சார்களை பொருத்திக்கொள்ளும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவியை அணிந்து கொள்பவருக்கு `எலெக்ட்ரோடாக்டைல் தூண்டுதல்’ எனப்படும் ஒரு மின்சார செயலின் மூலம் `சிலிர்ப்பு அல்லது கூச்ச உணர்வு’ ஏற்படும். இதற்கு கருவியிலிருந்து வரும் மின்சாரம் (வோல்டேஜ்) தோலின் மீது பாய்வதே காரணம். சென்சார்களால் கட்டுப்படுத்தப்படும் இந்த மின்சாரத்தின் அளவு தொடப்படும் பொருளைப் பொறுத்தே அமையுமாம்.
மிகவும் சுவாரசியமான இந்த மின்னணு விரல் நுனிகளின் பயன்கள் என்ன?

அறுவை சிகிச்சைக்கு பயன்படும் கையுறைகளில் இந்த விரல் நுனிகளைப் பயன்படுத்தலாம். நானோ ஜவ்வு பொருத்தப்பட்ட கை யுறைகளால் ஒரு திசுவின் தடிமன் அல்லது பொதிவினை உணர முடியுமாம். மேலும், இதை அணிந்துகொள்ளும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணரால் திசுக்களை லேசாக சீவி விடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மணிக்கட்டில் கட்டக்கூடிய, ஹை ப்ரீகுவன்சி ஏ.சி. மின்சாரத்தை வெளிப்படுத்தும் மின்கலம் ஒன்று பொருத்தப்பட வேண்டியது அவசியம் என்கிறார் ரோஜர்.    

மின்னணு விரல் நுனிகளின் பயன்கள் அறுவை சிகிச்சையோடு நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி, மிகவும் முக்கியமான, உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாத இதயத்தின் மின்சார செயல்பாடுகளுடைய 3டி மேப்பை கொடுக்கவல்லதாம் இந்த கருவி. இதயத்தை சுற்றி பொருத்தப்படக்கூடிய நானோ ஜவ்வினால் ஆன உறையின் மூலம் சாத்தியப்படும் இந்த பயன் ஒழுங்கற்ற இதயத்துடிப்பை சரிசெய்துவிடுமாம்.

இன்னும் சுவாரசியமாக, ஒரு வித பலூன் மூலம் நானோ ஜவ்வினை இதயத்துக்குள் செலுத்தி, பின்னர் அந்த பலூனை ஊதுவதன் மூலம் நானோ ஜவ்வு இதயத்தின் உட்புற சுவரின் மீது ஒட்டுமாறு செய்துவிடலாமாம். இந்த மருத்துவ முயற்சியை செயல்படுத்த மெட்ரானிக் என்னும் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறார் ரோஜர்.

இது தவிர, விளையாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனமான ரீபோக்குடன் இணைந்து, விளையாட்டில் பயன்படக்கூடிய, உடலில் அணியும் வகை மின்சாரக் கருவிகளை தயாரிக்கும் எண்ணமும் இருக்கிறதாம் ஆய்வாளர் ரோஜருக்கு