Sunday, March 06, 2011

உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பும் காரணம்

உலகளவில் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும். இது இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்). அதாவது 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை. 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது.

உணவில் சேர்க்கும் உப்புக்கும், இரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்த அழுத்தத்தைச் சீராக்க நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உடல் எடை அதிகரிக்கும் போது ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே BMI அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்

மிகப்பெரிய பனிக்கட்டி படலம்


அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரியதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீட்டர் அடர்த்தி உடையதாக ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பனிப்படலங்கள் எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் நகருகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும். மேலும் உலகம் வெப்பமயமாதலினால் அண்டார்டிகா இந்த விதமாக மாறும் என்ற உண்மையும் வெளிக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் போது கேம்பர்ட்சேவ் மலைகள் அண்டார்டிகாவின் அடி ஆழத்தில் புதைந்துள்ளன என தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீர் எவ்வாறு மலைகளின் பள்ளத் தாக்குதல்களில் பாயும் என்பதை பற்றியும் இந்த ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

பனிப் படலங்கள் எப்போதும் மேலிருந்து கீழாக தான் வளரும். ஆனால் இது கீழிருந்து மேலாக எவ்விதம் வளரும் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விமான ராடார்கள் மூலம் பனியின் அடர்த்தி, அடுக்குகளாய் மாறும் நிலை மற்றும் பாறைப் படுக்குகளில் பனி படர்தல் கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடலின் கனிம வளம் பற்றியும் ஆய்வு செய்ய முடிந்தது. இவ்வாறு கண்டறியப்பட்ட பனிப்படலங்களில் டோம்சிக் பகுதியில் உள்ளவைகள் 800000 ஆண்டுகள் பழமையானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியும் உபகரணம் அறிமுகம்

பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது.
இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும்.
அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது.


கடலுக்கு அடியில் மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு

கொசுக்கள் மூலம் பரவும் ப்ளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற ஒட்டுண்ணியின் மூலம் மலேரியா நோய் பரவுகிறது. உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் உலக சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுப்புது மருந்துகளும் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் "சீ வீட்" என்ற கடல் தாவரம் மலேரியா காய்ச்சலை எளிதாக கட்டுப்படுத்தும் என்ற தகவல் தற்போதைய ஆய்வில் வெளியாகி உள்ளது. ஜார்ஜியா தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நீண்ட ஆய்வு மேற்கொண்டனர். சீ வீட் தாவரத்தில் உள்ள ரசாயனப் பொருள் மலேரியா கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றுள்ளது. அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட இத்தாவரம், பங்கல் என்ற காளான் வகை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆய்வு முடிவுகள் இறுதிக்கட்ட ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன. அதன் பிறகே இந்த தாவர மருந்து சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.