Sunday, August 21, 2011

நம்மை அறியாமலே அதிசயம்!

அன்றாடம் நாம் சிந்தித்து முடிவு செய்யாமலே பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரில் கை பட்டால் `படக்’கென்று கையை எடுத்து விடுகிறோம்.

இங்கு, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று, அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடனே நரம்புகள் அச்சேதியைத் தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே கைத்தசைகள் சுருங்கிக் கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன.

அதெல்லாம் சரிதான். ஆனால், வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிய யோசனை நமக்கு ஏற்படுகிறதே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்தில் இருந்து தொடர்ந்து பெருமூளைக்குச் செல்கிறது. எனவே, சுட்ட வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா?’ என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால், கையைக் கொதிநீரில் இருந்து எடுத்த செயல் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நிகழும் செயல்களை அனிச்சைச் செயல்கள் (Reflex actions) என்பார்கள்.

தூங்கும்போது கொசு கடிக்கிறது. உடனே கை கொசுவை அடிக்கிறது. அரைகுறை உறக்கத்திலேயே இது நடைபெறுகிறது. உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் நிகழ்கின்றன. இவற்றில் மூளைக்குத் தொடர்பில்லை.

உடலின் அனிச்சைச் செயல்களில் பல, உடலுடன் கூடப் பிறந்தவையாகும். அதாவது அவை இயல்பாக, பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. ஆனால், பயிற்சியின் மூலம் அனிச்சைச் செயல்களை உடல் கற்றுக்கொள்ளும். அதை நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி பாவ்லோவ், அதை சூழல் சார்பான அனிச்சைச் செயல் (Conditioned reflex) என்றார்.

அனிச்சைச் செயல், உடலின் நிலையைப் பொறுத்தது என்பது தெளிவு. களைத்துப்போன தேகத்தில் அனிச்சைச் செயலின் வேகம் குறையும். பெருமூளையின் சிந்தனைகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிக்கும். அச்சம், கோபம் போன்ற உள்ளக் கிளர்ச்சிகளும் அனிச்சைச் செயல்களைப் பாதிப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி இணையம்

Saturday, August 06, 2011

கண்களை இமைக்கக் காரணம்

நெஞ்சிலே வந்து பூத்த பூவே
என்னை ஆளும் காதல் தீவே
என் கண் விழியாய் நீ ஆனாய்

உன் கண் இமையாய் நான் ஆவேன்

மழை அல்லது பனியின்போது கார் பஸ்சில் சென்றால் கவனித்திருக்கலாம். அப்போது ஹவைப்பர்' அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவும். ஆனால் எந்த ஹவைப்பரும்' நம் கண் இமைகளுக்கு நகராகாது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது? இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை.

அதன் பணி தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும் மைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும் எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கிறது. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயபடுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும் போதும் நான் அழுகிறோம் என்றே கூறலாம்.

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்! கண்களுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் இது போல் அடிக்கடி இமைகள் துடிக்கும்.