Friday, March 18, 2011

புது மிருகம் – சிறுத்தையா, புலியா?

சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன.


இந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.


“நகரங்கள் பெருகி வருவதால், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வெவ்வேறு இடங்களில் தனித்தனி குழுக் களாக வசித்த மிருகங்கள், இப்போது ஒரே இடத்தில் அருகருகே வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இதன் காரணமாக, இவ் வாறு புதுப்புது கலப் பின மிருகங்கள் தோன்றுகின்றன…’ என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “வெளி உலகத்திற்கு தெரியாமலேயே பல வித மிருகங்கள் காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது…’ என, வேறு சிலர் வாதிடுகின்றனர். உண்மை என்ன என்பது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் தான் தெரிய வரும்.

ஜாப்பான் பூகம்பத்தால் புவிச்சுழற்சி வேகம் அதிகரிப்பு

ஜப்பானிய நிலநடுக்கம் காரணமாக உலகில் இன்னொரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது நிலநடுக்கம் ஏற்பட்ட தேதியிலிருந்து புவிச்சுழற்சியின் வேகம் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட ஜப்பானியப் நில அதிர்வைத் தொடர்ந்து புவியின் சுழற்சி வேகம் 1.6 மைக்ரோ செகண்ட்ஸ் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானி ரிச்சர்ட் கிரேஸ் இன் ஆய்வின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டு்ள்ளது. அதன் பிரதிபலனாக வெள்ளிக்கிழமையின் நாள் சுருங்கியுள்ளது. அதிலும் பகல் பொழுதின் நேரமே குறைந்துள்ளது. அவ்வாறு ஒரு நாளின் பொழுது சுருங்கிய நிகழ்வானது வெள்ளிக்கிழமையுடன் நின்று விடும் என்றே நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கு முன்பும் கடந்த வருடம் சிலியில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக புவிச்சுழற்சியில் இவ்வாறானதொரு மாற்றம் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று கடந்த 2004 ம் ஆண்டு சுமாத்ராவில் இடம்பெற்ற பூமியதிர்வின் காரணமாக 6.8 மைக்ரோ செகண்டுகள் குறைவான வேகத்தில் புவிச்சுழற்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 13, 2011

ஜப்பானின் நிலநடுக்க தாக்கம்: பூமி 4 அங்குலம் நகர்வு


ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக அதன் பிரதான தீவு தனது அச்சில் இருந்து எட்டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது. இதை அமெரிக்காவின் பூகற்பவியல் நிபுணர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இத்தாலிய பூகற்பவியல் மற்றும் எரிமலைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் தகவல்களின் பிரகாரம் நேற்றைய நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோ மீற்றர் நீளமும், 160 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட பூமிப்பரப்பில் பிளவுண்டாகி புவித்தட்டு நகர்ந்த காரணத்தாலேயே நேற்றைய நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரலை என்பன நிகழ்ந்துள்ளன. அதன் காரணமாக பசுபிக் கடல் பகுதிக்கு கீழான புவித்தட்டு பதினெட்டு மீற்றர்கள் நகர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஜப்பானில் நேற்று இடம் பெற்ற சுனாமித் தாக்கமானது கடந்த 2004 ம் ஆண்டின் சுனாமியுடன் ஒத்ததாக இருந்ததுடன், கடந்த 140 வருடங்களில் அங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக நேற்றைய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

குச்சி வடிவில் காணப்படும் உலகின் மிகநீளமான பூச்சி

உலகிலேயே மிக நீளமான பூச்சியொன்றிணைவிஞ்ஞானிகள் Borneo தீவில் கண்டுபிடித்துள்ளனர். இது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகவிஞ்ஞானிகள்​ தெரிவித்துள்ளனர்.

இதனை ஒத்ததான பூச்சியொன்றினை பிரித்தானியாவின் இயற்கை வரலாற்று நூதனசாலையும் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை மலேசியாவின் இயற்பியலாளரான Datuk Chan Chew Lunகண்டுபிடித்துள்ளார்

இந்தப்பூச்சியானது காலுடன் சேர்த்து சுமார் 22 அங்குலம் நீளமாகும்.அதன் உடம்பு 14 அங்குலமாகும். இதனைக்கண்டு பிடித்தDatuk Chan Chew Lun அவர்களை கெளரவபடுத்தும் முகமாக அப்பூச்சிக்கு Phobaeticus chani (“Chan’s mega-stick,”)எனப்பெயரிட்டுள்ளனர்

குரோமோசோம் குறைபாடே தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம்

குறைபாடே காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் மரபணு சங்கேதக் குறியீட்டை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறுகிறது அவர்களின் ஆராய்சி முடிவு.

ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குறைபாடான DNA-வின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள் பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், குரோமோசோம் 20-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த ஜீன் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்களின் கண்டுபிடிப்பு தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்

Saturday, March 12, 2011

சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி

சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது.
தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது. இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும்.
மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் பூமிக்கு அருகில் வருகிறது

18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரன் மீண்டும் பூமிக்கு அருகில் வரப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த மாதம் 19 ம் திகதி சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரப்போகிறது. அதாவது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைலாக குறையும். கடந்த 1992 ம் ஆண்டுக்குப் பிறகு பூமியும், சந்திரனும் மிக அருகில் வரப் போகின்றன. வரும் பௌர்ணமி அன்று சந்திரன் வழக்கமான அளவை விட சுமார் 90 சதவீதம் பெரியதாக இருக்கும்.

அடுத்த மாத பௌர்ணமி வரை இதை பார்க்க முடிவதுடன் வெளிச்சமும் அதிகமாக இருக்கும். சூப்பர்மூன் என்ற இது போன்ற நிகழ்வு இதற்கு முன்பு 1955, 1974, 1992 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டது. அதாவது 18 முதல் 19 ஆண்டு இடைவெளியில் நிகழ்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் இமெயில்கள் பரவி வருகின்றன. வானில் அதிசயங்கள் நிகழும் போது நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனினும் பூமியில் நிகழும் மாற்றங்களுக்கு சந்திரன் எந்த வகையிலும் காரணமாக அமையாது.

கடற்கரை நகரங்களில் மட்டும் வானிலையில் சிறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலில் அலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி ஜான் கெட்லே தெரிவித்துள்ளார். கடந்த 2005 ம் ஆண்டில் சூப்பர்மூன் ஏற்பட்ட போது அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை டிரேசி என்ற சூறாவளி புரட்டிப் போட்டதாகவும், 1974 ல் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. சந்திரன் மிக அருகில் வருவதால் ஏற்படும் வானிலை மாற்றங்களால், பூமியில் வெப்பம் தணியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் கோடைகால வெப்பத்திலிருந்து இந்த ஆண்டு மட்டும் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

Sunday, March 06, 2011

உயர் இரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பும் காரணம்

உலகளவில் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு, இரத்த நாளங்கள் சிதைந்து போதல், கண் பார்வை பறிபோதல் ஆகியவை ஏற்படும். நினைவுத் திறனும் குறைந்து சீரான சிந்தனை தடைபடும். இருபது வயதை அடைந்து விட்டாலே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 40 வயதை அடைந்து விட்டால் ஆண்டுதோறும் ரத்த அழுத்தப் பரிசோதனையை வழக்கமாக கொள்ள வேண்டும்.

இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளத்தின் மீது இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தம் பாயும் வேகத்தை குறிக்கும். இது இரண்டு வகையிலான அளவில் கணக்கெடுக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கும் போது வெளியேற்றப்படும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (சிஸ்டோலிக்) மற்றொன்று இதயத்தின் கீழறைகள் விரியும் போது வெளியேறும் ரத்தம் ஏற்படுத்தும் அழுத்தம் (டயஸ்டோலிக்). அதாவது 120/80 என்பது சீரான ரத்த அழுத்தத்தின் அளவு. 139/89 என்பது உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான முந்தைய நிலை. 140/90 என்ற அளவோ, அதற்கு மேலோ உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டுவிட்ட நிலையை குறிக்கிறது.

உணவில் சேர்க்கும் உப்புக்கும், இரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. அதிக உப்பு சேர்த்து கொண்டால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். சிலருக்கு சிறியளவில் உப்பு சேர்த்து கொண்டாலே உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இவ்வகையை சேர்ந்தவர்கள். சீரான உடல்நிலையில் உள்ளவர்கள் தினமும் 5 கிராம் அல்லது ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கொள்ளலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்த அழுத்தத்தைச் சீராக்க நிறைய மருந்துகள் தற்போது கிடைக்கின்றன. வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு இவ்வகையான மருந்துகளையும் சிறியளவில் உட்கொண்டு வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உடல் எடை அதிகரிக்கும் போது ரத்தக் குழாய்களுக்கான அழுத்தம் அதிகரிக்கும். எனவே BMI அளவைச் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். செயலற்றுக் கிடப்பவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து தேவைக்கு அதிகமான பணி செய்யும் நிலை ஏற்படும். இதயம் சீக்கிரம் செயலிழக்கும். நடைபயிற்சி, மித ஓட்டப் பயிற்சி, நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் மேற்கொள்ள வேண்டியது மிக அவசியம்

மிகப்பெரிய பனிக்கட்டி படலம்


அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரியதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீட்டர் அடர்த்தி உடையதாக ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பனிப்படலங்கள் எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் நகருகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும். மேலும் உலகம் வெப்பமயமாதலினால் அண்டார்டிகா இந்த விதமாக மாறும் என்ற உண்மையும் வெளிக் கொண்டு வரும் என நம்பப்படுகிறது. இந்த ஆராய்ச்சியின் போது கேம்பர்ட்சேவ் மலைகள் அண்டார்டிகாவின் அடி ஆழத்தில் புதைந்துள்ளன என தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீர் எவ்வாறு மலைகளின் பள்ளத் தாக்குதல்களில் பாயும் என்பதை பற்றியும் இந்த ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்கள் கூறுகின்றது.

பனிப் படலங்கள் எப்போதும் மேலிருந்து கீழாக தான் வளரும். ஆனால் இது கீழிருந்து மேலாக எவ்விதம் வளரும் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விமான ராடார்கள் மூலம் பனியின் அடர்த்தி, அடுக்குகளாய் மாறும் நிலை மற்றும் பாறைப் படுக்குகளில் பனி படர்தல் கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடலின் கனிம வளம் பற்றியும் ஆய்வு செய்ய முடிந்தது. இவ்வாறு கண்டறியப்பட்ட பனிப்படலங்களில் டோம்சிக் பகுதியில் உள்ளவைகள் 800000 ஆண்டுகள் பழமையானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியும் உபகரணம் அறிமுகம்

பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது.
இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும்.
அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது.


கடலுக்கு அடியில் மலேரியாவை துரத்தும் பாசி கண்டுபிடிப்பு

கொசுக்கள் மூலம் பரவும் ப்ளாஸ்மோடியம் பால்சிபரம் என்ற ஒட்டுண்ணியின் மூலம் மலேரியா நோய் பரவுகிறது. உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சலால் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் உலக சுகாதார நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுப்புது மருந்துகளும் அறிமுகமாகி வருகின்றன.
அந்த வகையில் "சீ வீட்" என்ற கடல் தாவரம் மலேரியா காய்ச்சலை எளிதாக கட்டுப்படுத்தும் என்ற தகவல் தற்போதைய ஆய்வில் வெளியாகி உள்ளது. ஜார்ஜியா தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நீண்ட ஆய்வு மேற்கொண்டனர். சீ வீட் தாவரத்தில் உள்ள ரசாயனப் பொருள் மலேரியா கிருமிகளை அழிக்கும் திறன் பெற்றுள்ளது. அதிக மருத்துவ குணங்களைக் கொண்ட இத்தாவரம், பங்கல் என்ற காளான் வகை நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆய்வு முடிவுகள் இறுதிக்கட்ட ஒப்புதலுக்கு காத்திருக்கின்றன. அதன் பிறகே இந்த தாவர மருந்து சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்பு வெகுவாக தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.